ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நிகழ்வாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் முல்லைத்தீவில் நடத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 10 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இனவழிப்பு வாரத்தின் அஞ்சலி நிகழ்வுகள் மே 12 -மே 18 வரை முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றுவருகின்றது.
இதன் தொடக்க நிகழ்வாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரையிலும் செஞ்சோலை மாணவர்கள் படுகொலை செய்யபட்ட வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்திலும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் புவனேஸ்வரன் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நினைவுச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதனை அடுத்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக பொது சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை அடுத்து வவுனியாவில் பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக பொது சுடர் ஏற்ப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்தோடு நாளை மன்னாரில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று பின்னர் மன்னார் ஊடாக முழங்காவில் பகுதியில் குறித்த நினைவேந்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி செலுத்துவது தொடர்பாக தமிழ் மக்கள் குழப்பம் அடைந்திருததால் படுகொலைகளுக்கும் நீதிகோரி தமிழ் மக்கள் அனைவரும் இந்த வருடமும் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடி அஞ்சலிக்க வேண்டும் என சிவாஜிலிங்கம் இதற்கு முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறினார்.
மேலும் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியையும் அச்சமற்ற போக்கையும் அகற்றும் முகமாக இந்த நினைவேந்தல் வாரத்தினை தான் ஆரம்பித்து வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள 21 முக்கிமான இடங்களில் இனிவரும் நாட்களில் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்ள போவதாகவும் அனைவரைம் உணர்வெழுச்சியுடன் மே 18 ஆம் திகதி நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.