இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த சின்மயிக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. இதை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சின்மயி வேறுவகையான போராட்டத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடந்ததாக, இரண்டு சம்பவங்களை குறிப்பிட்டு நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் அத்துமீறல் முறைப்பாட்டை தெரிவித்தார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகயின் பரிந்துரையின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிக மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது.
முன்னாள் பெண் ஊழியர் அளித்த புகாரை நீதிபதி பாப்டே தலைமையிலான நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக் குழு முன் ஆஜராகி வந்த அந்தப் பெண் ஊழியர் தன்னுடன் வழக்கறிஞர் ஒருவரையும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அதற்கு நீதிபதி பாப்டே தலைமையிலான குழு அனுமதி மறுத்தது. இதனால், விசாரணைக் குழுவில் இருந்து அந்தப் பெண் ஊழியர் திடீரென விலகினார். இந்நிலையில் ஆதாரங்கள் ஏதும் இல்லை எனக்கூறி முறைப்பாட்டை தள்ளுபடி செய்தனர்.
இதை எதிர்த்து பாடகி சின்மயி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டதற்கு நீதித்துறை மாண்பு எனக்காரணம் காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவமதிப்பாகும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என பொலிஸார் நிராகரித்துவிட்டனர்.
பொலிஸார், அனுப்பிய பதில் கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டு அடுத்தடுத்த பதிவுகள் மூலம் சின்மயி விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், புதிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் வகையில், “மே.12 அன்று 4 மணியிலிருந்து 5 மணி வரை அவரவர்கள் எங்கிருந்தாலும், தனியாகவோ, இருவராகவோ, குழுவாகவோ இணைந்து நேரடி காணொளி (Live Video) வெளியிடுங்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதி கோகாய் பாலியல் குற்றச்சாட்டில் சார்பில்லாத, வெளிப்படையான சட்ட ரீதியிலான விசாரணை வேண்டும் என கேளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, “சாதாரண ஒரு பெண் சக்திமிகு மனிதரால் பாலியல் வழக்கு விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறதாம்” என தமிழ்நாடு பொலிஸாரை விமர்சித்துள்ளார்.