ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மத்திய மாகாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதால் எந்தவொரு அசம்பாவதிங்களும் இல்லையென மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.
அத்துடன் பாடசாலைகளுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பெற்றோர்கள் பிள்ளைகளை அச்சமின்றி பாடசாலைக்ளுக்கு அனுப்பலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நுவரெலியா மாவட்டத்தில் ‘வீடமைப்பு உதவிக்கான பிரதான வேலைத்திட்டம்’ எனும் ஆரம்ப நிகழ்வு நுவரெலியா மாநகர சபை கூட்ட மண்டபத்தில் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பாதுகாப்புத் தரப்பினருக்கு ஆளுநர் என்ற வகையில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இனிவரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாது.
அத்தோடு அனைத்துப் பாடசாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அச்சமின்றி பாடசாலைக்கு கல்வி நடவடிக்கைகாக அனுப்பி வைக்க வேண்டும்.
அத்தோடு மாணவர்களுக்கு பெரியளவிலான புத்தகப் பைகளை கொடுக்காமல் புத்தங்களை கையில் எடுத்து செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்தால் பாதுகாப்பு பிரச்சினையில் சிரமம் ஏற்படாது” என்றார்