அத்துடன் இவ்வாறான தீவிர போக்குடையோர் எல்லா சமூகத்திலும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, மாகாணசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெல்ல முடியாதவர்கள் தற்போதைய சூழலை வைத்து வங்குரோத்து அரசியல் செய்யும் நிலையில் உள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வவுனியா தீருநாவல்குளத்தில் உள்ள விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “இலங்கையில் நடந்த மிலேச்சத்தனமான தாக்குதல் ஈஸ்டர் தின தாக்குதலாகத்தான் இருக்கும். இதனை இஸ்லாமிய பயங்கரவாதம் என்கின்றனர்.
ஆனால் அனைத்து இஸ்லாமியர்களையும் அவ்வாறு எண்ணவேண்டாம். அனைத்து சமூகத்திலும் தீவிரப் போக்குடையவர்கள் இருக்கின்றார்கள். இந்த தாக்குதலை ஒரு குறிப்பிட்டவர்களே செய்துள்ளனர். அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் கொடுக்காமல் அரசு எடுக்கும் செயற்பாடுகளை நாங்கள் பாராட்டுகின்றோம்.
அரசும் முன்பே சில நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பே இவ்வாறு கடும் போக்குடன் சிலர் பேசியுள்ளனர். அவர்கள் குறித்து அவதானம் தேவை எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த நேரம் அரசாங்கம் சிந்திக்கவில்லை.
ஏனெனில் முஸ்லிம்களில் இவ்வாறு உருவாக மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. சில இடங்களில் இவ்வாறான நிலை வராது என நாங்கள் கூடச் சொன்னோம். ஆனால் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்யவும் நினைக்கின்றார்கள். எனது கருத்தையும் திரிவுபடுத்தி கூறுகின்றார்கள். அடுத்து வருகின்ற தேர்தலுக்காக இதனைப் பயன்படுத்துகின்றார்கள்” என்று அவர் தெரிவித்தார்.