அத்துடன், பயங்கரவாதம் உலகில் எங்குமே வெற்றிபெற்றதில்லை என்றும் அடிப்படைவாத பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான நோக்கங்களுக்கு இலங்கையரிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க கூடாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்திற்கு இன்று (புதன்கிழமை) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் மற்றும் மாகாணத்தின் முஸ்லிம் இளைஞர் யுவதிகளை சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் இலங்கையின் பிரச்சினை மட்டுமல்ல எனவும் அது சர்வதேசத்துடன் தொடர்புடைய பயங்கரவாதச் செயலாகுமென ஜனாதிபதி கூறினார்.
இந்த சர்வதேச பயங்கரவாத குழுவுக்கு எதிராக செயற்பட உலகின் பலம்வாய்ந்த நாடுகள் முன்வந்திருக்கும் நிலையில் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கும் நடவடிக்கைகளை எமது பாதுகாப்பு தரப்பினர் தற்போது மிக வெற்றிகரமான முறையில் முன்னெடுத்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் பாதிக்கப்படும் வகையிலான நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டு பயங்கரவாதத்திற்கு எந்த வகையிலும் துணைபோக வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி நாட்டில் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்துவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் அரச அதிகாரிகள், பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இச்சந்திப்பில் பாதுகாப்புத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் தெளிவான மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்துடன், நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் தற்போது திட்டமிட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அந்த நிகழ்ச்சித் திட்டதின் ஊடாக அனைத்து பிரஜைகளும் அச்சமும், சந்தேகமுமின்றி சுதந்திரமான சமூகத்தில் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.