வெள்ளாங்குளம் பண்ணையை பகிர்ந்தளிக்க நேர்முகத்தேர்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நேர்முகத் தேர்வு இன்று (வியாழக்கிழமை) காலை மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் படையினர் வசமிருந்த வெள்ளாங்குளம் பண்ணையில், சுமார் 264 ஏக்கர் நிலப்பரப்பு படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பண்ணையினை முன்னாள் போராளிகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்பொருட்டு இன்று நேர்முகத் தேர்வு இடம்பெற்றது.
குறித்த நேர்முகத் தேர்விற்கு முன்னாள் போராளிகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்கள் என சுமார் 357 பேர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த தேர்வில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு வெள்ளாங்குளம் பண்ணையில் காணிகளைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
குறித்த பண்ணையை விடுவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.