தனது தனிப்பட்ட பாதுகாப்பு படைப்பிரிவின் பிரதி தலைவியாக செயற்பட்டு வந்த சுதிடாவை திருமணம் செய்து அந்நாட்டின் ராணியாக அறிவித்துள்ளார்.
தாய்லாந்து மன்னர் குடும்பம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து மன்னர் முடிசூட்டு விழாவுக்கான பணிகள் அந்நாட்டில் கடந்த ஒருமாத காலமாக இடம்பெற்று வருகின்றன. நாளை மறுதினம் முடிசூட்டு விழாவுக்கான ஆரம்ப நிகழ்வு ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், இந்த செய்தியை மன்னர் குடும்பம் அறிவித்துள்ளது.
66 வயதான தாய்லாந்து மன்னர் இதற்கு முன்னர் மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார். 7 குழந்தைகள் உண்டு. இந்நிலையில், 40 வயதான சுதிடாவை தற்போது உத்தியோகபூர்வமாக திருமணம் முடித்துள்ளார்.
70 வருடகாலமாக தாய்லாந்தை ஆட்சிசெய்த மகா வஜிரலொன்கோர்னின் தந்தை கடந்த 2016ஆம் ஆண்டு இறந்த பின்னர், மகா வஜிரலொன்கோர்ன் மன்னர் பொறுப்பை ஏற்றார்.
அதேபோன்று சுதிடா வஜிரலொன்கோர்ன் தாய் விமான சேவையில் முன்னர் பணிப்பெண்ணாக பணியாற்றியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு வஜிரலொன்கோர்னின் பிரத்தியேக பாதுகாப்பு படைப்பிரிவில் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் தாய்லாந்து பாதுகாப்பு படைப்பிரிவில் அவருக்கு ஜெனரல் தர அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இருவரும் இதற்கு முன்னர் பொது இடங்களில் ஒன்றாக தென்பட்டபோதும், தற்போதே திருமணம் செய்துகொண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவர்களின் சம்பிரதாயபூர்வ திருமண நிகழ்வு தொடர்பான காட்சிகளை தாய்லாந்து தொலைக்காட்சிகள் நேற்று மாலை ஒளிபரப்பின.