யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலேனும் வெசாக் பண்டிகை நிறுத்தப்பட்டிருக்கவில்லை என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழலில் வெசாக் கொண்டாட்டங்கள் மற்றும் சமய அனுஷ்டானங்களை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இலங்கை முப்பது ஆண்டுகால யுத்தத்தை எதிர்கொண்ட ஒரு நாடு. அக்காலப்பகுதிகளில்கூட வெசாக் பண்டிகை கொண்டாடுவதை நிறுத்தவில்லை. பாடசாலைகளை தொடர்ந்து மூடி மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் பின்னோக்கி நகர இடமளிக்கவில்லை.
அக்காலப்பகுதியில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், சாதாரண வாழ்க்கை முறையை நடத்திச் செல்வதற்கு அரசாங்கமும், பாதுகாப்பு படையினரும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
படையினரின் ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பின் கீழ் சமய அனுஷ்டானங்கள் நடத்தப்பட்டிருந்ததுடன், வெசாக் தோரணைகள் அமைக்கப்பட்டு, தான சாலைகளும் நடத்தப்பட்டிருந்தன.
தற்போது அவ்வாறானதொரு சூழ்நிலை மீண்டும் நாட்டில் உருவாகியுள்ளது. ஆனால், அதற்கு அஞ்சி ஓரிடத்தில் முடங்காது முன்னோக்கி நகர்ந்துச் செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.
விகாரைகள் தவிர்ந்த பிற இடங்களில் தான்தோன்றித்தனமாக வெசாக் தோரணைகளை அமைப்பதனாலும், தான சாலைகளை நடத்துவதனாலும் ஏற்படும் விளைவுகளுக்கு தமது அமைச்சு பொறுப்பு கூறாது என புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் சாகல ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.