ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து மே 23ஆம் திகதிக்குப் பின்னர் நல்ல முடிவு எட்டப்படும் என ரஜினி தெரிவித்துள்ளதாக அவரின் மூத்த சகோதரர் சதய நாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ்நாட்டு மக்களுக்காக அவரிடம் சிறப்பாட திட்டங்கள் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி கே.கே.நகர் அருகே ஓலையூர் பகுதியிலுள்ள குமாரமங்கலம் கிராமத்தில் ரஜினியின் தாய் சௌ.ராம்பாய் – தந்தை ரானோஜிராவ் ஆகியோருக்கு ஸ்டாலின் புஷ்பராஜ் என்ற ரசிகரால் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
ரஜினியின் தாய், தந்தையரின் மார்பளவு வெண்கல சிலைகள், சுமார் இரண்டரை அடி உயரமுள்ள சிவலிங்கம் ஆகியவற்றுடன் கூடிய இந்த மணிமண்டபம் கடந்த மார்ச் 25ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், இதன் 48ஆவது நாள் மண்டல பூஜை இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஜினியின் மூத்த சகோதரர் சத்ய நாராயண ராவ் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் குறிப்பிடுகையில், “ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் பற்றி மே 23ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிப்பதாக கூறியுள்ளார்.
அப்போது நிச்சயம் நல்ல முடிவு வரும். சிறப்பான திட்டங்கள் அவரிடம் உண்டு. ஒருவகையில் அவர் அரசியலுக்கு வராமல் தாமதமாவதும் நல்லதுக்குத்தான். நல்லதே நடக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.