புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்கள் புலனாய்வுப் பிரிவோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுகிறார்கள் என்றதொரு பதற்றத்தை நாட்டிலே பரப்புவதற்காகவே புலனாய்வுப் பிரிவின் ஒரு பகுதி கொலைகளை செய்வதற்கும் துணிந்துவிட்டதாக சுமந்திரன் கூறினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதைனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “இராணுவ புலனாய்வுப் பிரிவில் ஒரு பிரிவு மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுகிறார்கள் என்றொரு பதற்றத்தை நாட்டிலே பரப்புவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனை வெறும் வதந்தியாக மட்டும் அவர்கள் பரப்பவில்லை. அந்த வதந்தியை மக்கள் நம்பப் செய்வதற்காக கொலைகளைக் கூட செய்வதற்கு தயாராக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வவுணதீவு சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது.
அது ஒரு சம்பவம். அதனைப் போலவே என்னைக் கொல்வதற்கு தீட்டப்பட்ட சதித்திட்டமும் அப்படியானதாக இருந்திருக்கலாம். ஏனெனில் உயிர் அவர்களுக்கு முக்கியமல்ல. விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெற்றுவிட்டார்கள் என்ற செய்தியை அனைவரும் நம்பவேண்டும் என்பதுதான் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது.
அதற்காக அவர்கள் பலரை உபயோகிக்கிறார்கள். முன்னாள் போராளிகளாக இருந்தாலும் கூட எங்கள் எல்லாருக்கும் தெரிந்தவகையிலே அவர்களில் சிலர் புலனாய்வோடு வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு இரகசியம். அது போலத்தான் இந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் புலனாய்வுப் பிரிவோடு சேர்ந்து வேலை செய்திருக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.