சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட சட்டமூலத்தில் அரசாங்கம் திருத்தங்களை கொண்டுவரும் என ஆதவன் செய்தியினால் அறியமுடிகின்றது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக எதிர்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ரணில் விக்ரமசிங்க கடந்த நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை இது தொடர்பாக கருத்து தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல, எதிர்க்கட்சி இந்த சட்டத்தை இயற்றுவதற்கு ஆரம்பத்தில் ஆதரவாக இருந்தனர் என்றும் ஆனால் ஆனால் இப்போது அவர்கள் அதை எதிர்க்கிறார்கள் எனவும் கூறினார்.
இந்த நிலையிலேயே தாம் இந்த சட்டமூலம் தொடர்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்தோடு தேவை ஏற்படின் சட்டமூலத்தில் மாற்றத்தை கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் ஆராய நாடாளுமன்ற தெரிவு குழுவை அமைக்கும்படி எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இருப்பினும் அவ்வாறு நாடாளுமன்ற தெரிவு குழு அமைக்கப்படாது என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயத்தில் நாடாளுமன்ற தேர்வு குழுவை அமைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் இதற்கு பதிலாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனான இந்த விடயம் தொடர்பாக உட்கார்ந்து விவாதிக்க தாங்கள் தயாராக உள்ளோம் என்றும் கூறினார்.
இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள் உட்பட பல குழுக்களால் வெளிநாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவின் மேற்பார்வையில் இந்த சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.