கொன்சர்வேற்றிவ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையிலான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(செவ்வாய்க் கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாகவும் விரிவானதாகவும் அமைந்திருந்ததாக தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம் இன்றும் பேச்சுவார்த்தை தொடருமென அறிவித்துள்ளது.
பிரெக்ஸிற் தொடர்பாக நிலவும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் தொழிற்கட்சியுடனான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தையை கொன்சர்வேற்றிவ் கட்சி முன்னெடுத்துள்ளது.
மே மாதம் இடம்பெறவுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் பங்கெடுப்பதை தவிர்க்கும் நோக்கத்துடன் அதற்கு முன்னதாக பிரெக்ஸிற் உடன்படிக்கைக்கு பாராளுமன்றத்தின் ஆதரவைப் பெறுவதற்கு பிரதமர் தெரேசா மே விரும்பினார்.
பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு தொழிற்கட்சியின் ஆதரவு தேவைப்பட்ட காரணத்தால் தொழிற்கட்சியுடனான பேச்சுவார்த்தைகளை பிரதமர் ஆரம்பித்தார்.
ஆனாலும் இதுவரை இருதரப்பினரிடையேயும் உடன்படிக்கை எதுவும் எட்டப்படாத காரணத்தால் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் பங்கெடுக்கும் நிலைக்கு பிரித்தானியா தள்ளப்பட்டுள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் பிரித்தானியா பங்கெடுக்க வேண்டும் என்பது பிரதமருக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.