ராணுவ நடவடிக்கையை எடுக்க அமெரிக்கா தயாராகவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெனிசுவேலாவில் அதிகரித்துவரும் போராட்டம் மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவுகட்டும் வகையில் அங்கு சுமுகமான ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு இல்லாவிட்டால் இராணுவ நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது என இன்றைய (புதன்கிழமை) ஊடக சந்திப்பில் மைக் பொம்பியோ இவ்வாறு கூறினார்.
மேலும், வெனிசுவேலா விவகாரத்தில் இராணுவ நடவடிக்கைகளுக்கான சாத்தியம் உள்ளது. அதுதான் தேவை என்றால், அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் நிலைப்பாட்டில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெளிவாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுவேலாவில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும் அங்குள்ள நிலைவரங்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே இன்றும் அரசுக்கு எதிராக புதிய போராட்டங்களை முன்னெடுக்கும்படி குவைடோ அழைப்பு விடுத்துள்ளார். குவைடோவின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
வெனிசூலாவின் அதிபராக நிகோலஸ் மடுரோ கடந்த ஆண்டு மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள எதிர்க்கட்சி, இந்த தேர்தல் முடிவை ஏற்காத நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, தன்னை இடைக்கால அதிபராக பிரகடனம் செய்தார்.
இராணுவத்தினர் தங்களுக்கு ஆதரவாக இருந்து, மடுரோவை வெளியேற்ற போராடும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, கடந்த ஜனவரி முதல் இருந்து வெனிசூலாவில் தொடர்ந்து போராட்டங்கள், வன்முறை என பதற்றமான சூழல் நிலவி வருகிறமை குறிப்பிடத்தக்கது.