வழக்கை தள்ளுபடி செய்யும் விண்ணப்பத்தை நிராகரித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளை மீது யாழ். மேல் நீதிமன்றில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சீராய்வு மனுவின் இடைக்கால நிவாரணமாக மாணவர்கள் இருவருக்கும் பிணை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
மாணவர்கள் இருவரையும் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிப்பது மற்றும் அதற்கு முன்னர் அவர்களை உடனடியாகப் பிணையில் விடுவிப்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய நிலையிலேயே இந்தச் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன.
அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் அன்றிரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி மாணவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு சமர்ப்பணம் செய்தனர்.
மாணவர்கள் சார்பான விண்ணப்பம் மீது நேற்றுமுன்தினம், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டது. வழக்குத் தாக்கலில் உள்ள தவறுகள் சீர்படுத்தக் கூடியவை என்று வியாக்கியானம் வழங்கி மன்று மாணவர்கள் மீதான பிணை விண்ணப்பத்தையும் நிராகரித்தது.
இந்நிலையில், நீதிவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளை மீது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனு சட்டத்தரணி கலாநிதி குமாரவேல் குருபரனால் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில் மாணவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, அடிப்படையில் தவறு எனச் சுட்டிக்காட்டி அதனை தள்ளுபடி செய்து கட்டளையாக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன், மேல் நீதிமன்றம் இறுதிக் கட்டளையை வழங்கும் வரை இடைக்கால நிவாரணமாக மனுதாரர்களான மாணவர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த சீராய்வு மனு வரும் திங்கட்கிழமை மேல் நீதிமன்றால் விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.