அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலையடுத்து முப்படைகளின் தீவிர சோதனை நடவடிக்கைகளின் பின்னர் அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. மட்டக்களப்பு கல்குடா வலயத்தில் 50 சத வீதமான மாணவர்கள் சமூகமளித்துள்ளதாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் திங்கட்கிழமை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட உயர்தர பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை முன் நுழைவாயிலில் வைத்து இராணுவம், பொலிசார் மற்றும் பாடசாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் புத்தகப் பைகள், பிரயாணப் பைகள் போன்றன சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தேசிய அடையாள அட்டை என்பனவும் சரி பார்க்கப்பட்டது.
அத்துடன்; மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதிகளில் ஆங்காங்கு இராணுவத்தினரால் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தபட்டன. மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகள் வழமைக்கு மாறாக பிரிதொரு இடத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்குடா கல்வி வலயத்தில் 46 உயர்தரப் பாடசாலைகள் காணப்பட்ட நிலையில் அனைத்து பாடசாலைகளிலும் காலைவேளையில் 50 வீதத்துக்கு மேற்பட்ட மாணவர்களின் வருகையை அவதானித்தாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி மேலும் தெவித்தார்.
இதன்போது சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி எல்லைப் பாடசாலையான வாழைச்சேனை இந்துக் கல்லூரி என்பன முழுமையான சோதனை நடவடிக்கை இடம்பெற்றதுடன், குறித்த இடங்களுக்கு கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இதற்கமைவாக தரம் - 6 லிருந்து 13 ஆம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும், தரம் - 1 தொடக்கம் தரம் - 5 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.