இன்னும் 50 பயங்கரவாதிகள் தயாராகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொதுபலசேனா தெரிவித்துள்ளது.
எனவே இந்த விடயத்தை எளிதாக எண்ணாமல் பாதுகாப்புத்துறை மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பொதுபலசேனா குறிப்பிட்டுள்ளது.
ராஜகிரிய, பொதுபலசேனாவின் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பொதுபலசேனா அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், தேசிய பாதுகாப்பு இன்னமும் உறுதியான நிலையை அடையவில்லை என்பதுடன் மக்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கமும் தனது பொறுப்பை முறையாக நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டில் இருந்து இன்னும் முழுமையாக ஒழிக்கப்பட வில்லை. தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய இஸ்லாமிய பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை வரையறுத்து குறிப்பிடவும் முடியாது. சர்வதேச சக்திகளின் உதவியுடன் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டுத்தாக்குதல்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.