வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இரண்டு வாள்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
மானிப்பாயில் ஏப்ரல் 10ஆம் திகதி மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்தது.
அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அத்தோடு சந்தேகநபர் வாளுடன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞர் ஒருவரின் கைவிரல் துண்டானதுடன் மற்றொரு இளைஞரும் காயமடைந்தார். அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சுன்னாகத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து வாள் ஒன்று கைப்பற்றப்பட்டது. சந்தேகநபர்கள் இருவரும் வாளுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.