இந்தியா மீதான விமானத் தாக்குதலுக்கு எஃப்-16 ரக விமானம் பயன்படுத்தியதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தபோது எப்-16 ரக விமானம் உள்ளிட்ட பாகிஸ்தானின் அனைத்து போர் விமானங்களும் தாக்குதலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் கட்டடங்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 26 ஆம் திகதி விமானத் தாக்குதல் நடத்தின. இதற்கு பதில் நடவடிக்கையாக மறுநாள் பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியா வான் பகுதியில் ஊடுருவி குண்டுகள் வீசின.
இதன்போது, தீவிரவாத ஒழிப்பு பணிக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய எஃப்-16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை பயன்படுத்தியது.
இந்திய ரேடரிலும் எஃப்-16 ரக போர் விமானத்தின் எலெக்ரோனிக் சமிக்ஞை பதிவாகியது. அந்த விமானத்தில் பயன்படுத்தப்படும் ஏ.ஐ.எம்-120 ரக ஏவுகணையின் பாகங்களையும் ஆதாரமாக இந்தியா காட்டியது. அத்துடன் இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் எஃப் -16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தின.
எனினும் தாக்குதலில் எஃப்-16 ரக விமானங்களை பயன்படுத்தவில்லை என பாகிஸ்தான் மறுத்து வந்தது. மேலும் இந்திய இலக்குகளையும், இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தவும் சீனாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஜே.எப்-17 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தாக்குதல் நடந்த நேரத்தில் பாகிஸ்தான் விமானப்படையின் அனைத்து விமானங்களும் வானில் பறந்து கொண்டிருந்தன என்றும் பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே எஃப்-16 ரக விமானம் பயன்படுத்தியதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.