ஒரு பரந்துபட்ட கூட்டணியை அமைப்பது குறித்து முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவுக்கிடையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது.
இதன் ஓர் அங்கமாக 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது குறித்து இரு தரப்பினருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றபோதும், எவ்வித தீர்மானமும் எட்டப்படாமல் முடிவடைந்ததுடன் சுதந்திர கட்சி வரவு செலவுத்திட்ட வாக்களிபில் பங்குபற்றாமல் விலகியது.
இந்நிலையில் தற்போது தொடர்ந்தும் இரு தரப்பினருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 10 ஆம் திகதி மஹிந்த தலைமையிலான மொட்டு கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதேவேளை வரவு செலவு திட்டத்திற் எதிர்த்து வாக்களிப்பதில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நடவடிக்கை ஏமாற்றமடைய வைத்துள்ளதாகவும் இது ஐ.தே.க. க்கு எதிராக நிற்க முடியாது என்பதை மறைமுகமாக அர்த்தப்படுத்தியுள்ளது என்றும் பொது ஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் சுதந்திர கட்சி பங்குகொள்ளாதமை ஒருபோதும், சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவுக்கு இடையில் ஏற்படுத்தப்படவுள்ள பரந்த கூட்டணி தொடர்பான பேச்சுக்களில் தாக்கத்தை ஏற்படுத்தாது என சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீ.ல.சு.க. தலைவர் நாட்டின் தலைவராக இருக்கும் அதேவேளை அவருக்கு கீழ் பல அமைச்சர்கள் இருப்பதால், வரவு செலவு திட்டத்தை தோற்கடிப்பது ஜனாதிபதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
இதன் காரணமாகவே வாக்கெடுப்பில் பங்குகொள்ளவில்லை என்றும், சுதந்திர கட்சி எதிராக வாக்களித்தால் கூட வரவு செலவு திட்டத்தை தோற்கடித்திருக்க முடியாது என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.