அமெரிக்க கப்பல்கள் இரண்டு அம்பாந்தோட்டையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு காலப் பகுதியில், அக்கூட்டுப் பயிற்சி தொடங்கிய இரண்டே நாட்களில் உயிர்த்த ஞாயிறு அன்று கொழும்பிலும் கிழக்கிலும் பொது மக்கள் கொத்தாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதனாலேயே இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள். கிறிஸ்தவப் பண்பாட்டின் முக்கிய வழிபாட்டு நாள் ஒன்றில் அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வேளை கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கொல்லப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்களவு தொகையினர் தமிழர்கள். எனவே இங்கு இலக்கு தமிழர்களும் சிங்களக் கிறிஸ்தவர்களுமா? உலகளாவிய இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பொன்றின் உள்ளுர் தற்கொலைப்படை ஆட்களே இத்தாக்குதல்களைச் செய்திருக்கிறார்கள்.
உலகளாவிய இஸ்லாமிய அமைப்புக்கள் இவ்வாறு கிறிஸ்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது இதுதான் முதற் தடவையல்ல. 2017இல் எகிப்தில் குருத்தோலை ஞாயிறு தினத்திலன்று இரண்டு தேவாலயங்களில் மொத்தம் 45 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். இத்தாக்குதலை ISIS செய்தது. 2016இல் பாகிஸ்தானில் ஒரு பூங்காவில் பெரிய வெள்ளியைக் கொண்டாடிய கிறிஸ்தவர்கள் 75பேர் கொல்லப்பட்டார்கள். இதைத் தலிபான் செய்தது. 2012இல் நைஜீரியாவில் உயிர்த்த ஞாயிறு தினத்திலன்று 38 பேர் கொல்லப்பட்டார்கள். இதைச் செய்தது Boko Haram என்றழைக்கப்படும் அமைப்பின் தற்கொலைக் குண்டுதாரியாகும்.
இலங்கைத் தீவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் இலக்கு வைக்கப்படுவது இதுதான் முதற் தடவையல்ல. கடந்த புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் அநுராதபுரத்தில் உட் கிராமம் ஒன்றிலுள்ள ஒரு மெதடிஸற்; தேவாலயம் தாக்கப்பட்டிருக்கிறது. தாக்கியது அங்குள்ள பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் என்று கூறப்படுகின்றது. அதுமட்டுமல்ல இலங்கைத்தீவில் முதன் முதலாக சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று பதியப்பட்டிருப்பது 1883இல் உயிர்த்த ஞாயிறு அன்று கொச்சிக்கடைப் பகுதியில் கிறிஸ்தவர்களின் மீது பௌத்தர்கள் மேற்கொண்ட தாக்குதல்தான். இலங்கைத்தீவின் கிறிஸ்தவ சமூகத்தை “பெரும்பான்மைக்குள் வாழும் சிறுபான்மை” என்று அழைப்பதுண்டு. ஒப்பின் டோர்ஸ் (Open Doors) என்றழைக்கப்படும் அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட உலகக் கண்காணிப்புப் பட்டியல்-2019 (World watch list 2019) என்ற பட்டியலில் உலகில் கிறிஸ்தவர்களுக்கு ஆபத்தான 50 நாடுகளின் வரிசையில் இலங்கை 46ஆவது இடத்தில் காணப்படுகின்றது.
இவ்வாறானதோர் புள்ளிவிபரத்தின் பின்னணியில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்திலன்று கிறிஸ்தவர்களும் உட்பட 250ற்கும் குறையாதவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் 40 இற்கும் குறையாதவர்கள் வெளிநாட்டவர்கள். இவ்வெளிநாட்டவர்களில் குறிப்பிடத்தக்க அளவு தொகையினர் கிறிஸ்தவப் பண்பாட்டினடியாக வந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு கிறிஸ்தவர்களை ஏன் இலக்காக்க வேண்டும்?
பிரித்தானியாவைச் சேர்ந்த மதகுருவும் சமூக விமர்சகருமான கைல்ஸ் பிஃபிறேசர் – Giles frasir கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலையடுத்து பின்வருமாறு கூறியிருக்கிறார்… “பாப்பரசரோடும், அவருடைய படைகளோடும், சிலுவை யுத்தங்களோடும், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளோடும,; யூதர்களுக்கு எதிரான போக்கோடும், பிரித்தானிய கொலனி ஆதிக்கத்தோடும், ட்ரம்பின் ஆதரவாளர்களோடும், கருத்தடைக்கு எதிராகப் போராடுபவர்களோடும் அவர்கள் (தாக்குதலை நடத்தியவர்கள்) கிறிஸ்தவ மதத்தைச் சேர்த்துப் பார்க்கிறார்கள்” என்று.
இஸ்லாத்தின் எதிரிகளாக கிறிஸ்தவர்களை மட்டும் ஏன் இலக்கு வைக்க வேண்டும்? மத்திய காலத்து சிலுவை யுத்த யதார்த்தம் இன்றைக்கும் பொருந்துமா? இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்வது பெருமளவிற்கு இந்துத்துவவாதிகளே. பர்மாவில் றோஹியங்கா முஸ்லிம்களை படுகொலை செய்வது அங்குள்ள பௌத்த மத கடும்போக்காளர்களே. இலங்கைத்தீவில் முஸ்லிம் மக்களை சிங்கள பௌத்தர்களும் தாக்கியிருக்கிறார்கள். தமிழ் மக்கள் தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளபட்டிருக்கின்றன. எனவே இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கு எதிராக செயற்படுவது கிறிஸ்தவப் பண்பாட்டினடியாக வந்த மேற்கு நாடுகள் மட்டுமல்ல.
இவ்வாறானதோர் பின்னணியில் இலங்கைத்தீவில் இதற்கு முன் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டிராத கிறிஸ்தவ சமூகம் இலக்கு வைக்கப்பட்டது ஏன்? மேற்கத்தைய நாடுகளை இஸ்லாத்திற்கு எதிரானவை என்று கருதும் தற்கொலைக் குண்டுதாரிகள் இஸ்லாமிய அமைப்புக்களுக்கு எதிரான போரில் ஈடுபடும் மேற்கத்தைய படைக் கட்டமைப்புக்களைத் தாக்காமல் Soft target என்று அழைக்கப்படும் ஆயுதம் தரித்திராத, போரில் எதுவிதத்திலும் சம்பந்தப்படாத சாதாரண சனங்களை ஏன் தாக்க வேண்டும்? அதுவும் மனிதக் குண்டுகளை அனுப்பி ஏன் தாக்க வேண்டும்? நியூசிலாந்தில் பள்ளிவாசலுக்குள் புகுந்து சுட்ட நபரின் மனோநிலைக்கும் இலங்கைத்தீவில் உயிர்த்த ஞாயிறை மரண ஞாயிறாக மாற்றிய இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களின் மனோநிலைக்கும் இடையிலுள்ள வேறுபாடுகள் என்ன? அமெரிக்காவும் மேற்கு நாடுகளும்தான் அவர்களுடைய எதிரிகள் என்றால் அம்பாந்தோட்டையில் தரித்து நின்று இரண்டு அமெரிக்கக் கப்பல்களோடு பொருதியிருக்கலாம். எதற்காக சாதாரண சனங்களை இலக்கு வைக்க வேண்டும்? அதிலும் சிங்கள – பௌத்த மற்றும் தமிழ் இந்து இலக்குகளை மிகக் கவனமாக ஏன் தவிர்க்க வேண்டும்?
மேற்படித் தாக்குதல்களின் பின்விளைவுகளைக் கருதிக் கூறின் தாக்குதலை நடாத்தியவர்கள் மட்டும் தற்கொலை செய்யவில்லை. தாக்குதலின் இலக்கும் தற்கொலை என்றே தோன்றுகிறது. ஏனெனில் தாக்குதலின் பின்விளைவுகள் வருமாறு.
முதலாவது கிறிஸ்தவ – முஸ்லிம் உறவுகளை இது கடுமையாகப் பாதிக்கும். முன்னெப்பொழுதும் இவ்விரு சமூகங்களுக்குமிடையில் பாரதூரமான முரண்பாடுகள் இருந்ததில்லை. முஸ்லிம் சமூகத்தவர்களை கிறிஸ்தவர்கள் சந்தேகத்தோடு பார்க்கும் ஒரு போக்கு இனி அதிகரிக்கும். இது இதுவரை காலமும் இலங்கைத்தீவில் இருந்திராத ஒரு போக்கு.
இரண்டாவது – சிங்கள – பௌத்த இலக்குகளைத் திட்டமிட்டுத் துல்லியமாகத் தவிர்த்திருந்தாலும் அதற்காக சிங்கள பௌத்த அரசக் கட்டமைப்பானது தாக்குதல் நடத்திய அமைப்பை சகித்துக்கொள்ளப் போவது இல்லை. ஏனெனில் பத்து ஆண்டுகளாக அவர்கள் கட்டியெழுப்பி வந்த அனைத்துலக பிம்பத்தை இருபது நிமிடங்களுக்குள் தற்கொலைக் குண்டுதாரிகள் தகர்த்தெறிந்து விட்டார்கள். 2009ற்குப் பின்னிருந்து இலங்கைத்தீவின் உல்லாசப் பயணத்துறை படிப்படியாக வளர்ச்சியுற்று வந்தது. கடந்த மூன்றாண்டுகளில் அது மிகப்பெரிய வளர்ச்சிகளைக் கண்டது. கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 23இலட்சம் உல்லாசப் பயணிகள் இலங்கைக்குள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் எல்லாவற்றையும் தலைகீழாக்கிவிட்டன. இலங்கைத்தீவின் அரசுக்கட்டமைப்பு ஸ்திரமிழந்து விட்டதான ஒரு தோற்றம் திடீரென்று ஏற்பட்டு விட்டது. இச் சேதத்தை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே இஸ்லாமியத் தீவிரவாதத்தை எல்லாவிதத்திலும் அது ஒடுக்கும்.
இது விடயத்தில் அரசாங்கத்தோடு இணக்க அரசியலைச் செய்யும் முஸ்லிம் கட்சிகளின் வாக்கு வங்கிகளுக்காக சிங்கள – பௌத்த அரசுக்கட்டமைப்பு தொடர்பான உலக அபிப்பிராயத்தை அரசாங்கம் பலியிடத் தயாராக இருக்குமா? அதோடு முஸ்லிம் சமூகத்திற்கும், அமைப்புக்களிற்கும் அரசியல்வாதிகளுக்கும் மேற்காசிய நாடுகளோடு உள்ள தொடர்புகளை இனி சந்தேகக் கண்கொண்டே பார்ப்பார்கள். இது இரண்டாவது விளைவு.
மூன்றாவது விளைவு- கடந்த சில சகாப்தங்களாக முஸ்லிம் தலைவர்கள் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களுடன் இணக்க அரசியலைச் செய்து தமது சமூகத்தையும் அதன் பொருளாதாரத்தையும் அபரிமிதமாகக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். இந்த வளர்ச்சி வேகத்தை குண்டுத் தாக்குதல்கள் பாரதூரமாகப் பாதிக்கும்.
நாலாவது – கிழக்கில் ஏற்கெனவே தமிழ் – முஸ்லிம் உறவுகள் நல்ல நிலையில் இல்லை. சீயோன் தேவாலயத்தின் மீதான தாக்குதல் அந்த விரிசலை ஆழப்படுத்தும்.
எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் இலங்கைத் தீவின் மூவினச் சூழலை முன்னெப்பொழுதையும் விட அதிகரித்த அளவில் சோதனைக்குள்ளாக்கி விட்டன. இதனால் அதிக பாதிப்பு முஸ்லிம் சமூகத்திற்குத்தான. முஸ்லிம்கள் இரண்டு பெரிய இனங்களினாலும் முன்னரைவிடக் கூடுதலாகச் சந்தேகிக்கப்படும் ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இப்படிப் பார்த்தால் தாக்குதலைச் செய்தவர்கள் எந்தச் சமூகத்தை அல்லது மதத்தைக் காப்பாற்ற விழைகிறார்களோ அதே சமூகத்தை இலங்கைத்தீவில் ஏனைய சமூகங்களால் சந்தேகிக்கப்படும் ஒரு நிலைக்குள் தள்ளிவிட்டிருக்கிறார்கள். அதாவது இது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மட்டுமல்ல இத்தாக்குதல்களே ஒர் அரசியற் தற்கொலைதான்.
Nilanthan