கனடா தனது குப்பைகளை பிலிப்பைன்ஸில் இருந்து அகற்றத் தவறியுள்ளதாகவும், இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான உறவு மோசமான கட்டத்தினை எட்டியுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக மனிலா துறைமுகத்தில் தேங்கியுள்ள அந்த கனேடிய குப்பைகள் அடங்கிய கப்பல் கொள்கலன்களை அகற்றும் விடயத்தில் கனடா உடனடியாக செயற்படாவிட்டால், அதன் விளைவுகள் பாதகமாக அமையும் என்றும், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பேச்சாளர் வல்வடோர் பனீலோ தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்தினுள் கனடா குறித்த அந்த கொள்கலன்களை அகற்றாவிட்டால் கனடாவுடன் ‘போர்ப் பிரகடனம்’ செய்யப்போவதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியும் சில நாட்களுக்கு முன்னர் எச்சரித்திருந்தார்.
இதற்கு முதற்தடவையாக பதிலளித்துள்ள கனேடிய அதிகாரிகள், பிலிப்பைன்ஸுடன் இறுதிச்சுற்று பேச்சுக்களை நடாத்திய பின்னர், குறித்த அந்த கொள்கலன்களை தாம் அகற்றவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த அந்த குப்பைக் கொள்கலன்களை பிலிப்பைன்ஸிலேயே அழித்துவிடுவதற்கு கனேடிய அதிகாரிகள் முயற்சிக்கின்ற போதிலும், அதற்கு இரண்டு நாடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாட்டாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், பிறிதொரு நாட்டில் குப்பைகளை கொட்டுவதை தடைசெய்யும் அனைத்துலக கடப்பாட்டினை மீறும் செயலாக அது அமைந்துவிடும் எனவும் எச்சரித்து வருகின்றன.
இவ்வாறான நிலையில் குறித்த இந்த கொள்கலன் விவகாரம் தொடர்பில், நாளை (திங்கட்கிழமை), மணிலாவில் உள்ள கனேடிய தூதுரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றினை நடாத்துவதற்கு பிலிப்பைன்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புக்களின் கூட்டணி ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.