இதனை அடுத்து குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் வழங்கிய அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை உடன் நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநரால் மாகாண பிரதம செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி பொறியியலாளர் ரகுநாதன் தலைமையிலான குழு சமர்ப்பித்த பரிந்துரை அறிக்கையை பிரதம செயலாளருக்கு அனுப்பிவைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஆளுநரின் செயலாளரைப் பணித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள இடருக்கு இரணைமடுக் குளத்தின் பராமரிப்பு முகாமைத்துவத்தின் தவறே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து உண்மையைக் கண்டறிய மாகாண ஆளுநரால் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை குழுவின் தலைவர் பொறியியலாளர் ரகுநாதனால் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் இன்று (திங்கட்கிழமை) நண்பகல் ஆளுநர் செயலகத்தில் கையளிக்கப்பட்டது.
மூவரடங்கிய இந்த விசாரணைக் குழுவின் தலைவராக பொறியியலாளர் எஸ்.ரகுநாதன் செயற்பட்டதுடன் பொறியியலாளர் இந்திரசேனன் மற்றும் பொறியியலாளர் ஹேரத் மந்திரித்திலக ஆகியோர் விசாரணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் சட்டத்தரணி இ.இளங்கோவன் மற்றும் உதவிச்செயலாளர் ஜே.எக்ஸ்.செல்வநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.