முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இதில் இலட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
நேற்று முதலே தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் தஞ்சையில் குவிந்தனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதுமட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தேரோட்டத்தைக் காண அதிகளவில் வந்தனர்.
தஞ்சை மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி ஆகிய 4 ராஜ வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இதனால் தஞ்சை நகரமே இன்று விழாக்கோலம் பூண்டது.
பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலை மாமன்னன் இராஜராஜ சோழன் கி.பி.1004ஆம் ஆண்டு கட்டத்தொடங்கி 1010ஆம் ஆண்டு கட்டி முடித்தார். மாமன்னன் இராஜராஜன் காலத்தில் பெரியகோயிலில் நடந்த திருவிழாக்கள் பற்றி கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரியகோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது