இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற ஜாலியான் வாலாபாக் படுகொலையின் 100ஆவது ஆண்டு நினைவுதினம் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
வடக்கு அம்ரித்சர் நகரில் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்ட இந்நினைவுதின நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் இந்தியாவுக்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் அஸ்குயித் கலந்துகொண்டார்.
நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரித்தானிய தூதுவர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக ஏற்பட்டுள்ள வெறுப்பு இன்றும் அவ்வாறே காணப்படுகின்றதென குறிப்பிட்டார். இச்சம்பவம் பிரித்தானியாவின் நற்பெயருக்கு களங்கம் என்றும் அதற்காக வருந்துவதாகவும் குறப்பிட்டார்.
குறித்த நினைவிடத்தில் இந்திய பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல்காந்தியும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பஞ்சாப் மாநில தலைவர் அமரிந்தர் சிங்கும் இதன்போது உடனிருந்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் அமுல்படுத்தப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 1919ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு ஜாலியான் வாலாபாக்கிலுள்ள மைதானத்தில் அமைதிப் போராட்டத்தை நடத்தினர். இதன்போது அங்கு நுழைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரித்தானிய – இந்திய இராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 379 பேர் உயிரிழந்ததாக பின்னர் நடத்திய விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியிலுள்ள சுவரில், துப்பாக்கிச்சன்னங்கள் இன்றும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய வரலாற்றில் மோசமான தாக்குதலாக வர்ணிக்கப்படும் இந்த தாக்குதலுக்கு இத்தனை வருட காலமாக பிரத்தானியா மௌனம் காத்து வந்தது. இந்நிலையில், 100ஆவது ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிக்கும் நாள் நெருங்கிய வேளையில், அதாவது கடந்த 10ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நாடாளுமன்றில் உரையாற்றியபோது இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.