அத்தோடு அரசியலமைப்பு சபை நினைத்தால் கூட பொலிஸ்மா அதிபரை நீக்குவதற்கான அதிகாரம் இல்லை எனவும் அரசியலமைப்பு சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் படி, நாடாளுமன்றத்தின் மூலம் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தால் மட்டுமே பொலிஸ்மா அதிபரை பதவியில் இருந்து அகற்ற முடியும் என்றும் சட்டமா அதிபர் நாகநந்த கொடிதுவக்கு கூறியுள்ளார்.
பிரதம நீதியரசர் அல்லது தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஒருவரை போலவே பொலிஸ்மா அதிபரின் பதவி நீக்கமும் இருக்கும் எனவும் இதுவே 19 ஆவது திருத்தத்தில் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, இந்திய புலனாய்வு அமைப்பு போதிய தகவல்களை வழங்கியும், அதனைத் தடுக்கத் தவறியதற்குப் பொறுப்பேற்று, பாதுகாப்புச் செயலரையும், பொலிஸ்மா அதிபரையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி கடந்த 24 ஆம் திகதி கோரியிருந்தார்.
குறிப்பாக அடுத்த 24 மணிநேரத்துக்குள் விலகல் கடிதங்களை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியிருந்தார். அதற்கமை பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகல் கடிதத்தை மறுதினமே கையளித்திருந்தார்.
இருந்தபோதும் பொலிஸ் மா அதிபர் இன்னமும் பதவி விலகவில்லை. அத்தோடு பதவி விலகல் குறித்து இதுவரை பொலிஸ் மா அதிபர் கருத்து வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.