தேனி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேனி என்.ஆர்.டி. நகரில் ஜெயலலிதா தங்கிய சிங்கப்பூர் பங்களாவில் குடியேறி அங்கிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.
ஜெயலலிதா தங்கிய வீட்டில் இளங்கோவன் குடியேறியது அ.தி.மு.க. தொண்டர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து தேனி நகர அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தேனியில் உள்ள சிங்கப்பூர் பங்களாவில் அம்மாவைத் தவிர எவரும் குடியிருந்ததில்லை. அம்மா வாழ்ந்த வீடு என்பதால் இதை நாங்கள் கோயிலாக பார்த்து வந்தோம். அப்படிப்பட்ட இந்த வீட்டை அவரை கடுமையாக விமர்சித்த இளங்கோவனுக்கு தாரை வார்த்துள்ளனர்.
அம்மாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் ராசியாக இருந்த பங்களா பறிபோய்விட்டதே என அ.தி.மு.க. தொண்டர்கள் வேதனைப்படுகின்றனர். அன்று, அம்மாவுக்காக அ.தி.மு.க கொடியுடன் கம்பீரமாக காத்துக் கொண்டிருந்த பிரசார வாகனம் நின்ற இடத்தில், இன்று காங்கிரஸ் கொடிகட்டிய வாகனம் நின்று கொண்டிருக்கின்றது” எனக் கூறினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2002ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.
அப்போது அவர், தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கினார். ‘சிங்கப்பூர் பங்களா’ என்று அழைக்கப்படும் அந்த வீட்டில் இருந்தபடியே தினமும் ஆண்டிப்பட்டிக்கு சென்று பிரசாரம் செய்துவந்தார்.
அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, முதல்வராக பதவி ஏற்றார். அதன்பின்னர், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போதும் அந்த சிங்கப்பூர் பங்களாவில் தங்கியிருந்து பிரசாரம் மேற்கொண்டார். ஜெயலலிதா வந்து தங்கியதால், அந்த பங்களா மிகவும் பிரபலம் ஆனது. அதை, ‘அம்மா வீடு’ என்றே அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.