உள்ளூர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே இவ்விடயத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹர்ஜீத் சிங் என்பவர் இவ்விவாகரம் தொடர்பாக மனு ஒன்றை நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்திருந்தார். அதில், மார்ச் 2017இல் சண்டிகரிலுள்ள குளோபல் எஜூகேஷன் மற்றும் கேரியர் என்ற பயண ஏற்பாட்டு அலுவலகத்தை அணுகி, அவுஸ்ரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான விசாவை பெற்றுத்தருமாறு கேட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த சாக்சி திர் என்ற தரகர், நிரந்தரமாக குடியேறுவதற்கான ஏற்பாட்டினை செய்ய 10 இலட்சம் ரூபாயை பெறுவதாகவும் முன்தொகையாக 1 இலட்சம் ரூபாயை வாங்குவதாகவும் குறிப்பிட்டதாக கூறியுள்ளார்.
அத்துடன், தனக்கு அவுஸ்ரேலியாவில் நல்ல தொடர்புகள் காணப்படுவதாகவும் அந்த தரகர் தெரிவித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து 1.15 இலட்சம் ரூபாயுடன் கடவுச்சீட்டை குறித்த தரகரிடம் ஹர்ஜீத் சிங் கொடுத்துள்ளார்.
சுமார் 8 முதல் 10 மாதங்களுக்குள் அவுஸ்ரேலிய பயணத்திற்கான ஏற்பாட்டை செய்வதாக தரகர் கூறியிருந்த நிலையில், எந்த பயண ஏற்பாடுகளையும் செய்யாததால் பணத்தை திரும்பப்பெற ஹர்ஜீத் சிங் அந்த தரகரின் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால், அலுவலகம் மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது
இந்நிலையிலேயே ஹர்ஜீத் சிங் நீதிமன்றத்தில் முறைபாடு பதிவு செய்துள்ளார். அதன்பின்னர் இவ்விவகாரத்தில் தலையிட்ட நீதிமன்றம், வழக்கு பதியவும் உத்தரவிட்டிருக்கின்றது.
மேலும் சாக்சி என்ற அந்த தரகர் கோரிய முன்பிணை நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.