குறித்த இளைஞனை, எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட மேலதிக நீதவான் லகிரு என் சில்வா இன்று (சனிக்கிழமை) உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று மாலை புத்தளம் மாவட்ட மேலதிக நீதவான் லகிரு என் சில்வாவின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவாக்காட்டில் கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
ஒன்றினைந்த மாணவர் பேரவை ஏற்பாடு செய்த இந்த போரட்டத்தில், புத்தளம் நகர பாடசாலை மாணவர்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
புத்தளம் தபால் நிலையத்துக்கு முன்னால் இருந்து பேரணியாகச் சென்ற மாணவர்கள் புத்தளம் – கொழும்பு முகத்திடல் வரை குப்பைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு நடந்து சென்றனர்.
இதையடுத்து, குறித்த மாணவர்கள் புத்தளம் – கொழும்பு முகத்திடலில் பாதையை, மறித்து போராட்டம் நடத்தியமையால் சில மணி நேரம் புத்தளம் – கொழும்பு பிரதான வீதியூடனான போக்குவரத்துகள் தடைப்பட்டிருந்தன.
சம்பவ இடத்துக்கு புத்தளம் பொலிஸார் வருகை தந்தமையால் அங்கு அமைதியின்மை நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைதியான முறையில் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.
இதன்போது, பாடசாலை மாணவர்களை சட்டவிரோதமாக ஒன்று௯ட்டி, வீதியை மறைத்து பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், 20 வயதுடைய இளைஞள் புத்தளம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.