தமிழகத்தில் மணல் அகழ்வினை தடுப்பதற்கு அனைத்து நதிக்கரைகளிலும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வழக்கு விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி வேணுகோபால் மற்றும் வைத்தியநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மணல் அகழ்வு நடவடிக்கைகளை தடுக்க தாலுகா அளவுகளில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்களிடம் இருந்து 2.15 கோடி ரூபாய் அபராதமாக பெறப்பட்டதாகவும் தமிழக அரசு மனுவொன்றை தாக்கல் செய்தது.
இதனை விசாரணை செய்த நீதிபதிகள் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் குற்றவாளிகளிடம் இருந்து அபராத தொகை பெறப்பட்டாலும், அதில் எத்தனை பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது என்பது குறித்து எந்த விடயங்களும் தெரிவிக்கவில்லை என்பதை சுட்டிகாட்டியது.
இதேவேளை இந்த வழக்கு குறித்து நேர்மையான அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க முன்வந்தாலும் பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் அவர்களின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டம் விண்ணமங்கலம், மொட்டூர், கங்காபுரம் ஆகிய கிராமங்களில் செய்யாறு நதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுப்படுபவர்களை தடுக்ககோரி அப்பகுதியை சேர்ந்தவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.