அத்துடன், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் உயிர் பாதுகாப்பு குறித்த புதிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றின் தேவை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு, இலங்கை மன்றத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை பாராட்டி இடம்பெற்ற ஜனாதிபதி பாராட்டு விருது விழாவில் இன்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டுக்குள் கொண்டு வரப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருள்களை கண்டறிதல் மற்றும் அதன் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான புதிய தொழிநுட்ப உபகரணங்களை விரைவில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உலகில் வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் எவ்வித தொழிநுட்ப உபகரணங்களுமின்றி அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் பணிகள் பாராட்டப்படவேண்டியது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக இன்று அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு கிடைத்து வருகிறது.
நாட்டின் பொதுமக்களும் போதைப்பொருளுக்கெதிரான போரில் இணைந்திருப்பது அதனை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. எனவே அனைத்து துறைகளினதும் பங்களிப்புடன் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமென நம்புகின்றேன்” என்று குறிப்பிட்டார்.