இச்செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் இதன் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட 14 பிரதேச செயலகப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அதற்கமைய செயலகங்கள் அனைத்திலும் ஒரே தினத்தில் ஒரே நேரத்தில் நாளை முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்திட்டங்களான போதைப் பொருள் ஒழிப்பு , குழந்தைகளை பாதுகாப்போம் , இராணுவீரர்கள் பராமரிப்பு , சிறுநீரக நோயை ஒழித்தல் , டெங்கு ஒழிப்பு , சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலன்திட்டங்கள் தொடர்பிலும், அமைச்சுக்களினால் பெற்றுக் கொள்ளக்கூடிய காணி உரிமை, தேசிய அடையாள அட்டை, புனர்வாழ்வு, குடிநீர், கல்வி மற்றும் ஏனைய சமூக நலன் போன்ற விடயங்கள் குறித்தும் இந்த 5 நாள் செயற்திட்டத்தினூடாக மக்கள் தேவையின் அடிப்படையில் முறையாக செயற்படுத்தபடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது அமைச்சுக்கள், அரச திணைக்களங்கள், சட்டவாரியங்கள் தொடர்பாக மக்களுக்குத் தேவையான செயற்பாடுகள் குறித்தும், அவற்றை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் பிரதேச செயலகங்களை தெளிவுப்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.