வேறுபாடுகளை கைவிட்டு பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து கவனஞ்செலுத்த வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், புலனாய்வு விடயத்தில் பலவீனங்களை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “இலங்கையின் நண்பர்கள் ஏற்கனவே அரசியல் தலைவர்கள் அரசியலை கைவிட்டு நாட்டின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துமாறு கோருகின்றனர்.
அரசியலை அடிப்படையாக கொண்ட நிலைப்பாடுகள் எடுக்கப்படுவதை காணமுடிகின்றது. இந்த தருணத்தை பயன்படுத்தி அரசியல் ரீதியில் இலாபமடைவதற்கு பலர் முயல்கின்றனர்.
குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்கள் குறித்து ஆழமாக சிந்திக்குமாறு நான் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன். நாட்டிற்கான விளைவுகள் குறித்து ஆழமாக சிந்திக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
கடந்த வருட இறுதியில் இலங்கையில் உருவாகிய அரசமைப்பு நெருக்கடி முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஒரு கணம் சிந்திக்கவைத்தது.
தற்போது, புலனாய்வு விடயத்தில் பாரிய தவறுகள் இழைக்கப்பட்டதை அரசாங்கமே ஏற்றுக்கொள்கின்றது. இந்த பலவீனங்களை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறவேண்டும்.
இதனிடையே, அதிநவீன உத்திகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதல் குறித்த விசாரணைகளில் அமெரிக்காவின் FBI இலங்கை அதிகாரிகளிற்கு உதவி வருகின்றது” என்று குறிப்பிட்டார்.