அன்றைய தினம் கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் காலை நேர திருப்பலி ஆராதனை நடைபெற்ற சந்தர்ப்பத்தில், சரியாக 8.45இற்கு முதலாவது குண்டு வெடித்தது.
சம்பவ இடத்திலேயே பலர் உடல் சிதறி மாண்டதோடு, அவயவங்களை இழந்தும் குற்றுயிராகவும் இன்றும் பலர் போராடுகின்றனர். பக்தர்களின் அருளால் நிரம்பி வழியும் கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம், இன்று மயானத்தை ஒத்த அமைதியுடன் காணப்பட்டது.
வழமையாக இன, மத, மொழி பேதமின்றி அங்கு மக்கள் செல்வது வழமை. உள்ளே சென்றதும் ரம்மியவும் இறையுணர்வும் ஏற்படும் அந்த இடத்திற்கு இன்று நாம் சென்றோம். உடைந்த கட்டிடமும், துண்டு துண்டுகளாக சிதறிய இறை சொரூபமும் என கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் அனர்த்த பிரதேசமாக காணப்பட்டது.
அந்தோனியார் ஆலய முன்றல் வீதியில் கண்ணீருடன் இன்று பலர் வழிபாட்டில் ஈடுபட்டமை எமது கமராவில் சிக்கின. ஆலயத்தை பழைய நிலைக்கு கொண்டுவரும் முனைப்பில், துப்பரவு நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டனர்.
இலங்கையில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற இடமாக கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் காணப்படுகிறது. அதன் பழைய நிலை மீளவும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.