பாகிஸ்தான் மீது இந்தியா இந்த மாதம் மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று உளவுத்துறையின் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.
எல்லைதாண்டி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவங்ளால் பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே உண்டான பதற்றம் தணிந்து வருவதாகத் தோன்றி வரும் சூழலில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தாக்குதல் ஏப்ரல் 16 முதல் 20 வரையிலான காலகட்டத்தில் நடக்க வாய்ப்புண்டு என்றும் தங்கள் கவலைகளை ஐ.நா பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளிடம் பகிர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பாகிஸ்தானிடம் என்ன ஆதாரம் உள்ளது, எந்த நேரத்தில் இந்தியா தாக்குதல் நடத்தும் போன்ற தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.
இந்தப் பிராந்தியத்தில் போர்ப் பதற்றத்தை உண்டாக்கும் நோக்கத்துடன் கூறப்பட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் பொறுப்பற்ற மற்றும் அபத்தமான கருத்துகளை மறுப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்புகளை இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தூண்டவே பொது வெளியில் பாகிஸ்தான் இவ்வாறு பேசுகிறது என்று இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள மறுப்பு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.