ஒன்றான மாட்டு வண்டி சவாரி மன்றமானது, யாழ். மாவட்ட சங்கமாக பதிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் இந்த சவாரி சங்கம் முதன்முதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பதிவுச் சான்றிதழ் கோவில் வீதி, நல்லூரில் அமைந்துள்ள அலுவலகத்தில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) சவாரி சங்கத்தின் உப தலைவராகச் செயற்பட்ட நித்தியானந்தம் கிருஷ்ணமூர்த்தியிடம அங்கஜனால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அமைப்பாளர் சின்னத்துரை உதயசீலன், யாழ். காரியாலய இணைப்பாளர் பிரதாப் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டுவண்டி சவாரி இலங்கையில் நீண்டகாலமாக நடத்தப்பட்டு வருகின்றது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக சவாரித் திடல்கள் உருவாக்கப்பட்டு, காளைகள் போட்டியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட காளைகளுடனான விளையாட்டுக்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், இலங்கையின் வடக்குப் பகுதியில் மாட்டுவண்டி சவாரிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களிலிருந்து காளைகள் அழைத்து வரப்பட்டு போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், மாட்டுவண்டி சவாரிகளை சட்ட ரீதியாக முன்னெடுத்துச் செல்வதற்கு சங்கங்களை பதிவு செய்வதில் பெரும் சிரமங்களை ஏற்பாட்டாளர்கள் எதிர்கொண்டு வந்தனர்.
மிருகவதை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும் என்ற அச்சமும் ஒரு தரப்பினரிடம் இருந்து வந்தது. எனினும் தமிழர் பாரம்பரிய விளையாட்டான மாட்டுவண்டி சவாரியினை பலரும் தைரியத்துடன் தொடர்ந்தும் முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், மாவட்டுவண்டி சவாரிகளுக்கான குறித்த யாழ். மாவட்ட சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளமை பாரம்பரியத்தைக் காக்கும் விடயமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.