ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிலுள்ள மீராவோடை வாராந்த சந்தை தொடர்ந்தும் நடைபெற வேண்டும் என்று கோரி ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக அப்பகுதி மக்களும், மீராவோடை மீரா ஜீம்ஆ பள்ளிவாயல், மீராவோடை வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த பேரணியும், ஆர்ப்பாட்டமும் இன்று புதன்கிழமை மீறாவோடையில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை வாராந்த சந்தையை மாதத்தில் இரண்டு தடவைகள் அதாவது முதலாவது வாரமும், இறுதியாக வருகின்ற மூன்றாவது வாரமும் வாராந்த சந்தையாக நடாத்துமாறு ஓட்டமாவடி பிரதேச சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆர்பாட்டாக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்த தீர்மானத்தினை தாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்து வாராந்த சந்தையினை தொடர்ந்து நடாத்தி வந்தனர். இந்த நிலையில் இதனை தடுத்து நிறுத்துமாறு கோரி ஓட்டமாவடி பிரதேச சபையானது வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
அந்த வகையில் மீராவோடை வாராந்த சந்தை தொடர்ந்தும் நடைபெற வேண்டும் என்று கோரி மீராவோடை பாடசாலை வீதியில் ஆரம்பித்த பேரணி சந்தை வீதி வழியாக மீராவோடை மீரா ஜீம்ஆ பள்ளிவாயல் வரை வந்தடைந்தது.
குறித்த பேரணியும், ஆர்ப்பாட்டமும் மீராவோடை மீரா ஜீம்ஆ பள்ளிவாயல், மீராவோடை வர்த்தக சங்கம், பொதுமக்கள், பொது அமைப்புக்கள் என்பன இணைந்து நடாத்திய பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது வாராந்த சந்தை மூவினத்தின் சகவாழ்வின் அடையாளம் அதனை சீர்குழைக்க வேண்டாம், தவிசாளரே பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டாதே, ஏழைக்காய் ஆரம்பித்த சந்தையை செல்வந்தருக்காக மூடாதே, கோறளைப்பற்று மேற்கு பிரதேசத்திலுள்ள 6000 பேரின் உரிமையை 16 பேருக்காக மறுக்காதே, ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே என பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பேரணியில் மக்கள் கலந்து கொண்டனர்.
மீராவோடை வாராந்த சந்தையின் மூலம் வாகரை தொடக்கம் மட்டக்களப்பு வரையான தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் இங்கு விற்பனை செய்வதாகவும், தமிழ், முஸ்லிம் மக்கள் இங்கு வருகை தந்து குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
அத்தோடு ஏழை மக்களின் கட்டமைப்பு இதன் மூலம் உயர்த்தப்படுவதாகவும், இங்கு குறைந்த விலையில் பொருட்கள் கொன்வனவு செய்வதன் மூலம் ஏழை மக்களின் பணச்சுமை குறைக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மீராவோடையின் 1957ம் ஆண்டு பொதுச் சந்தை ஆரம்பிக்கப்பட்டு வந்த நிலையில் யுத்தகாலத்தில் அவை நிறுத்தப்பட்டு சமாதானத்தின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 15ம் திகதி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி ஆகியோரால் வாராந்த சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டகாரர்கள்; தெரிவித்தனர்.
ஆனால் வாராந்த சந்தையை ஆரம்பித்த தவிசாளரே தற்போது இதனை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மீராவோடை வாராந்த சந்தையை ஒவ்வொரு வாரமும் நடாத்த அனுமதி வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.