தூத்துக்குடி லோக்சபா தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிரிஸ்டன்டைன் ராஜசேகர் மற்றும் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் காளிதாஸ் ஆகியோரை ஆதரித்து, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தூத்துக்குடி அருகேயுள்ள சிலுவைப்பட்டியில் நேற்று (சனிக்கிழமை) இரவு நடைபெற்றது.
குறித்த கூட்டத்திற்கு, மண்டல செயலாளர் இசக்கிதுரை தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆல்பர்ட் சாமுவேல், வேல்ராஜ், பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதன்போது கூட்டத்தில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்துள்ளது. அப்போதெல்லாம் செய்யாத மாற்றத்தை, எதிர்வரும் 5 ஆண்டுகளில் கொண்டு வந்துவிடப் போகிறதா? இந்த கேள்வியை, ஓட்டு கேட்டு வரும் காங்கிரஸாரிடம் மக்கள் எழுப்ப வேண்டும்.
அதே நேரத்தில், தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியில் இருந்த தி.மு.க மற்றும் அ.தி.மு.க, இதுவரை செய்யாத எந்த சாதனையை இனிவரும் 5 வருடத்தில் செய்துவிடப் போகிறது.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு, தற்போது அதனை மீட்போம் என்று தி.மு.க. கூறுகிறது. ஆனால், அதனுடன் கூட்டணியிலுள்ள காங்கிரஸோ, முடியாது என்று கூறுகிறது. இதனை மக்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலுள்ள பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தி.மு.க.வினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், காங்கிரஸும் முடியாது என்று சொல்கிறது. பாரதீய ஜனதாவும் முடியாது என்று சொல்கிறது. இந்த கட்சிகளுடன்தான் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். இதனை மக்கள் சிந்திக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி வைத்ததும், அதை தொடங்கி வைத்ததும் இவர்கள்தான். இதுவரை, 840 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனை தடுக்க முந்தைய ஆட்சியும், தற்போதைய ஆட்சியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நமது மீனவர்கள், மீன்பிடிக்க ஆசைப்பட்டு எல்லை தாண்டி போனதால்தான் இலங்கையில் பெரும்பான்மையினர் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று சொன்னவர்தான் தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கருணாநிதி. இப்படிப்பட்ட கட்சி ஆட்சிக்கு வந்து, மக்களுக்கு என்ன செய்யப் போகிறது.
ஏழைகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ராகுல்காந்தி கூறுகிறார். இதனை மக்கள் நம்பி விடக்கூடாது. இவருடைய கட்சியின் ஆட்சியில்தான் ஏழைகள் உருவானார்கள்.
நரேந்திர மோடி பணமதிப்பிழப்பை அறிவித்தார். அது சிறப்பான திட்டம் என்று கூறும் பாரதீய ஜனதா கட்சியினர், அந்த சிறப்பான திட்டத்தை வைத்து மக்களிடம் ஓட்டு கேட்க முடியுமா?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சமகல்வி கொடுப்போம். அனைவருக்கும், சிறப்பான மருத்துவம் இலவசமாக வழங்கப்படும். எனவே, நாம் தமிழர் கட்சியை நீங்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என, சீமான் கோரியுள்ளார்.