சமீபகாலமாகவே தென்சீனக் கடல் பகுதியில் பிரச்சினைக்குரிய இடங்களில் சீனா அத்துமீறி நுழைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீனாவுடன் பிலிப்பைன்ஸ் போர் செய்தால் பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்று டியுடெர்ட் கூறிவந்தார்.
தென்சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனக் கப்பல்கள் நுழைந்ததாக அந்நாட்டு வெளியுறவுத் துறை கூறியதைத் தொடர்ந்து சீனாவின் அத்துமீறலை டியுடெர்ட் எச்சரித்தார்.
இதுகுறித்து ரோட்ரிகோ டியுடெர்ட் கூறும்போது, ”நான் எந்தக் கோரிக்கையையும், பிரச்சினையையும் எடுக்கவில்லை. என்னிடம் இராணுவம் உள்ளது. நீங்கள் தொட்டீர்கள் என்றால் எனது வீரர்களை தற்கொலைப் படை தாக்குதலுக்குத் தயாராகுமாறு கூறுவேன்” என்றார்.
முன்னதாக, தென்சீனக் கடலில் உள்ள திட்டுத் தீவு, சீனா அமைத்துள்ள செயற்கைத் தீவுகளுக்கு மிக அருகில் உள்ளது. அங்கு பிலிப்பைன்ஸ் தேசியக் கொடி ஏற்றப்படும் என்று ரோட்ரிகோ முன்பு அறிவித்திருந்தார்.
சர்வதேசக் கடல் போக்குவரத்தின் முக்கியப் பாதையாகத் திகழும் தென் சீனக் கடற்பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதேபோல் அப்பிராந்தியத்தில் அமைந்துள்ள தாய்வான், தங்களின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் சீனா வாதிட்டு வருகிறது.
இந்த இரு விவகாரங்களிலும் சர்வதேச நாடுகள் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. தென் சீனக் கடற்பகுதி சர்வதேச எல்லைக்கு உட்பட்டது என்று அமெரிக்கா கூறிவருகிறது. இதனிடையே தங்கள் கடல் பகுதியை சீனா ஆக்கிரமித்து வருவதாக வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருணே உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.