எச்சரிக்கைகளை செவிமடுக்குமாறு சுற்றுசூழல் ஆர்வலரான கிரேட்டா துன்பெர்க் பிரித்தானிய அரசியவாதிகளை வலியுறுத்தியுள்ளார்.
பரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை சுவீடன் அரசாங்கம் பின்பற்றவில்லை என குற்றம்சாட்டி கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சுவீடனை சேர்ந்த 16 வயதான கிரேடா துன்பெர்க் எனும் மாணவியால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவரது ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் உலகெங்கிலுமுள்ள மாணவர்கள் காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காலநிலை மாற்றம் குறித்து விவாதிப்பதற்காக இன்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் சிலரை கிரேட்டா துன்பெர்க் சந்தித்துள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பாக விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை செவிமடுக்குமாறும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இச்சந்திப்பின்போது அரசியல் பிரமுகர்களிடம் கிரேட்டா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் காலநிலை மாற்றத்துக்கு எதிராக ஒருவார காலமாக லண்டனில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவரும் எஸ்ரிங்க்ஷன் ரெபல்லியன் குழுவுக்கும் கிரேட்டா தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
தொழிற்கட்சித் தலைவரான ஜெரேமி கோர்பின், லிபரல் டெமக்ராட்ஸ் தலைவர் வின்ஸ் கேபிள் மற்றும் பசுமைக் கட்சித் தலைவர் கரோலின் லூகஸ் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
காலநிலை மாற்றத்துக்கு எதிரான கிரேட்டாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் இச்சந்திப்பின்போது பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்டிஷ் தேசிய கட்சி மற்றும் ப்ளைட் சைம்ரு கட்சி ஆகியவற்றின் இங்கிலாந்து பாராளுமன்ற தலைவர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். பிரதமர் தெரேசா மே இச்சந்திப்பின் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.