கனேடிய படைகளை வெளியேற்றுவதால் அங்கு மேற்கொள்ளப்படும் உயிர்காப்பு மருத்துவ வெளியேற்ற நடவடிக்கைகளில் தடங்கல் ஏற்படும் எனவும், அதனை வேறு நாட்டு படையினரை வைத்து ஈடுசெய்யும் வரையிலும் கனடாவை தொடர்ந்து உதவுமாறும் ஐ.நா. சபை வேண்டுகோள் விடுத்தது
இருந்தபோதிலும், கனேடிய இராணுவம் தனது கடமைக் காலம் முடிவடைந்தவுடன் அங்கிருந்து வெளியேறிவிடும் என்ற உறுதியான நிலைப்பாட்டினை லிபரல் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
நியூ யோர்க்கில் நடைபெற்ற பாரிய அமைதிகாப்பு நடவடிக்கை மாநாட்டின் இறுதியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா பிறீலான்ட், ஒரு ஆண்டுக்கு மாலியில் அமைதிகாப்பு நடவடிக்கையில் தமது படையினரை ஈடுபடுத்த கனடா ஒப்புக்கொண்டதாகவும், அதனையே தாங்கள் பின்பற்றுவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தம்மால் வழங்கப்பட்ட உறுதிமொழியைப் பின்பற்றவேண்டிய தேவை உள்ளதாகவும், கனேடியர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை, ஐ.நாவுக்கு வழங்கிய உறுதிமொழியை, உலகின் ஏனைய பங்காளி நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழியை, மாலிக்கு வழங்கிய உறுதிமொழியை காப்பாற்றவேண்டிய கடப்பாடு உள்ளதாகவும், அதனையே தாம் மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலிக்கு சென்றுள்ள 250 கனேடிய இராணுவ வீரர்களும், எட்டு கனேடிய உலங்குவானூர்திகளும் எதிர்வரும் யூலை 31ஆம் திகதியுடன் தமது நடவடிககைகளை மாலியில் முடிவுறுத்திக் கொள்ளவுள்ள போதிலும், அதற்குள் அங்கு வந்து சேரவேண்டிய றோமானிய படைகள் ஒக்டோபர் மாத நடுப்பகுதி வரையில் காலதாமதமாவதால், அங்கு ஏற்படவுள்ள வெற்றிடத்தினை நிரப்புவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.