அவ்வகையில், எல்சல்வேடர், ஹோன்ட்ராஸ், கௌதமலா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவால் வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது.
மெக்சிகோ வழியாக எல்சல்வேடர், ஹோன்ட்ராஸ், கௌதமலா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருகின்றனர்.
அதனைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ட்டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அத்துடன் மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
எல்சல்வேடர் உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பலர் நுழைவதால் மெக்சிகோ எல்லையை மூடப்போவதாக ட்ரம்ப் சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தார்.
அத்துடன் “இந்த நாடுகள் தங்களது குடிமக்களை கேரவன்களில் ஏற்றி வந்து மெக்சிகோ எல்லையில் இறக்கிவிட்டு செல்கின்றனர். அமெரிக்க மக்களுக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர்” என டிரம்ப் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் அந்த நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “ட்ரம்பின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் இந்த 3 நாடுகளுக்குமான நிதியுதவி நிறுத்தப்படும். இதன்படி 700 மில்லியன் டொலர் நிதி உதவி முற்றிலும் நிறுத்தப்படும்” என்று தெரிவித்தார்.