ஜே.வி.பி.யின் கொத்மலை பிரதேச சபைக் கூட்டம் பூண்டுலோயாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜே.வி.பி.யின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்க இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கூட்டு நடவடிக்கையை மக்களும் நாமும் ஏற்றுக்கொண்டதாக இல்லை.
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஐ.தே.க. அரசு முன்வைத்து மூன்று வாக்கெடுப்பில் ஒன்று தோல்வி கண்டுள்ளது.
கட்சி என்ற உணர்வுடன் செயற்படாது ஐ.தே.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு சமூகம் தராததால் வாக்கெடுப்பில் தோல்வி கண்டனர்.
அதேநேரத்தில் ஊழல்களைக்கொண்டு செயற்படும் ஐ.தே.க. அரசாங்கம் வரவு செலவு திட்டத்தின் முதல் வாக்கெடுப்பின்போது ஜனாதிபதி தரப்பில் 20 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தராததால் வெற்றி பெற்றனர். இது ஒரு நாடகமாகவும் இருக்கலாம்.
ஆனால் மக்கள் விடுதலை முன்னணி வரவு செலவு திட்டத்தை தோல்வியடையச் செய்ய எதிர்த்தே வாக்களிக்கும் இதில் மாற்றமில்லை.
இருந்த போதிலும் உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான முக்கிய வாக்கெடுப்பு தோல்வி கண்டுள்ளது. இதனால் உள்ளூராட்சி சபைகள் அதன் உத்தியோகஸ்தர்கள் மற்றும் சபைகளின் நடவடிக்கைகளுக்கு சில பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.