கடந்த செவ்வாய்க்கிழமை வீசிய கடுமையான சூறைக்காற்று, குறித்த அந்தப் பிராந்தியத்தில் மரக்கிளைகளை முறித்து வீழ்ந்ததில், பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து போனதாகவும், இதன் காரணமாக இன்றைய நிலைவரப்படி சுமார் இரண்டு இலட்சத்து 75 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கியூபெக் ஹைட்ரோ தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த சூறைக்காற்றினால், லாவல், லானாடியர் மற்றும் லோரென்சன்ஸ் பிராந்தியங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், லாவல் பகுதியில் மின் தடையினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக தங்குவதற்காக நேற்று இரவு இரண்டு நிலையங்கள் திறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லாவல் பகுதியில் மட்டும் நேற்று காலையிலும் 80,000ற்கும் அதிகமானோருக்கான மின்னிணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளதாகவும், லனோடியார் பகுதியிலும் 90,000ற்கும் அதிகமானோர் இரவு முழுவதும் இருட்டில் கழித்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையில் இந்தநிலைமையைச் சீர்செய்வதற்காக, ஏனைய பாதிக்கப்படாத பிரதேசங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், திருத்தவேலைகளும், சுத்திகரிப்புப்பணிகளும் தொடங்கியுள்ளதாகவும் கியூபெக் ஹைட்ரோ பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.