இதனையடுத்து தமிழ்ச் சங்க நிர்வாகக் குழுவின் சட்டரீதியற்ற செயற்பாட்டினால் தந்தை செல்வாவின் நினைவுக் கூட்டம் இரத்தானது என கொழும்புத் தமிழ்ச் சங்கம், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
இது குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா விரிவான அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கொழும்புத் தமிழ் சங்க மண்டபத்தில் இன்று நடைபெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தந்தை செல்வா நினைவுக் கூட்டம் குறித்து வெளிவந்திருக்கும் பல்வேறு செய்திகள் தொடர்பாக உண்மை நிலைவரங்களைத் தெரியப்படுத்த வேண்டியிருக்கின்றது.
நிகழ்ந்துவிட்ட இந்த முழுச் செயற்பாட்டுக்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலுள்ள தமது நலனை முன்னெடுப்பதற்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சிலர்தான் காரணமேயன்றி தமிழ்ச் சங்கம் அல்ல என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும்.
தந்தை செல்வாவின் நினைவுக் கூட்டம் பற்றிய விபரம் யாவும் தெரிவிக்கப்பட்டே அனுமதி கோரப்பட்டது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டு மண்டபத்துக்கான வாடகைத் தொகையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தந்தை செல்வா நினைவுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் பேசுவதாக அறிவிக்கப்படவில்லை என்பது தவறு. தந்தை செல்வா நினைவுக் கூட்டத்தில், அதுவும் கட்சிக் கிளையால் நடத்தப்படும் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் பேசமாட்டார்கள் என்று கூறுவது தவறு.
கூட்ட அறிவித்தல்கள், அழைப்பிதழ்கள் யாவும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட பின் இத்தகைய மோசமான செயல்களைச் செய்தவர்கள் இதற்கு உரிய பதிலைக் கூறவேண்டும்.
தமிழ் சங்க மண்டபத்தில் அடிக்கடி வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களின் உரைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
சங்கப் பணியாளர் ஒருவர் கூட்ட அனுமதி இரத்து குறித்து அறிவித்தவுடனும் நாம் செயலாளருடனும், தலைவருடனும் மற்றும் பல செயற்குழு உறுப்பினர்களுடனும் தொடர்புகொண்டோம். குறிப்பிட்ட ஒரு கட்சியின் செல்வாக்குக்கு உட்பட்டு இயங்கும் எண்ணிக்கையில் குறைந்த ஒரு சில செயற்குழு உறுப்பினர்களின் நெருக்குதல்கள்தான் அந்த முடிவுக்குக் காரணம் என்பது தெளிவாகப் புரிந்தது.
இந்த ஒரு சிலரின் தரத்தாழ்வான, பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக தந்தை செல்வா நினைவுக்கு மறுத்ததாக தமிழ் சங்கத்திற்கு இழிவுப்பெயர் வரக்கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருந்தோம். ஆனால், இதே பொறுப்பற்ற சக்திகளின் செயற்பாடு காரணமாகவே நாம் இந்த அறிக்கையை வெளியிட வேண்டியும் ஏற்பட்டது.
இதுபற்றிய அவர்களது கடிதத்திற்கு நாம் அனுப்பிய பதில் கடிதத்தில் அந்த முடிவு தவறானது என்பதை தெளிவாக எடுத்துக் கூறியிருந்தோம். அக்கடிதத்தை செயற்குழுவில் சமர்ப்பித்து முடிவெடுக்குமாறு வேண்டியிருந்தோம்.
அவ்வாறு அக்கடிதத்தைச் சமர்ப்பிக்காது, பின்பு எமக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில் தங்கள் தவறுக்கு மன்னிப்புக் கோருவதாகவும் தந்தை செல்வாவின் கூட்டம் வேறு எங்கு நடைபெறினும் தமது முழு ஆதரவு உண்டென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எமது கடிதத்தை கூட்டத்தில் சமர்ப்பித்து விவாதம் நடைபெற்றிருப்பின் இவர்களது மறுப்பை இவர்களே திரும்பப் பெறவேண்டியிருந்திருக்கும்.
இன்றுவரை தமிழ்ச் சங்கத்தின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களும் செயற்குழு உறுப்பினர்களும் இது குறித்து எமக்கு தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்து வருகின்றார்கள். தந்தை செல்வா நினைவுக்கு மறுப்புத் தெரிவித்தமைக்குப் பொறுப்பானவர்கள் நிச்சயம் வரும் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.