185 ஆவது கம் உதாவ வீட்டுத் திட்டமான மீலாதுன் நபி கிராமமே நேற்று (புதன்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டது.
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச குறித்த வீட்டுத் திட்ட கிராமத்தை மக்களிடம் கையளித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெறிப்படுத்தல் மற்றும் வழிகாட்டலில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜீத் பிரேமதாச குறித்த வீட்டுத் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார்.
இந்த மீலாதுன் நபி கிராமத்தில் 26 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் என்பனவும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, 26 பேருக்கு அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டதுடன், வீட்டுத் திட்டத்திற்கான கடன்களுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு இரண்டு தென்னை மரக் கன்றுகள் வீதம் வழங்கப்பட்டதுடன், இலவசமாக மூக்குக் கண்ணாடிகளும், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், தேசிய கொள்கைகள் மற்றும் பெருளாதார இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, புத்தள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்க பண்டார, ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவவி, அரச திணைக்கள அதிகாரிகள், ஐக்கிய தேசியக் கட்சியின் கற்பிட்டி அமைப்பாளர் எம்.என். நஸ்மி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.