அத்துடன், பாரதிய ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால் அடுத்த 5 ஆண்டுகளும் ஏழைகளுக்கான ஆட்சியாக மோடி அரசு இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார்.
இதன்போது அவர் பேசுகையில், “புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இருவரது குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கின்றேன். பாகிஸ்தான் பிடியில் சிக்கி பத்திரமாக மீட்கப்பட்ட அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர். பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனை நினைத்து இந்த கூட்டத்தில் உரையாற்றுகிறேன்.
புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கவே பாகிஸ்தானுள் புகுந்து தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. நாம் காஷ்மீரை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
தமிழிசை சௌந்தரராஜனுக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு மத்திய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு அதிக நிதியை பாரதிய ஜனதா அரசு ஒதுக்கியுள்ளது. தென் மாநிலங்களை பாரதிய ஜனதா ஒருபோதும் கவனிக்காமல் விட்டதில்லை. ஆனால் தமிழகத்திற்கு காங்கிரஸ் போதிய நிதியை ஒதுக்கவில்லை. பாரதிய ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு மேலும் அதிக நிதி ஒதுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்