ஆனால், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்காக பெறப்பட்ட 16 ரக போர் விமானங்களை பயன்படுத்தவிலை என பாகிஸ்தான் இராணுவத் தளபதி கபூர், ரஷ்ய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்களை குண்டுவீசி அழித்தது. இதையடுத்து, இந்தியாவிற்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன.
அமெரிக்காவினால் வழங்கப்பட்ட F-16 ரக போர் விமானங்களை பயன்படுத்தி இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் விமானப்படைகள் தாக்குதல் நடத்த நுழைந்தன. அப்போது இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்தது.
இந்த F-16 ரக போர் விமானங்களை பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அமெரிக்கா நிபந்தனை விதித்திருந்தது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக விசாரிப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.
இதற்கிடையே இந்தியாவின் தாக்குதலில் எங்களுடைய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என கூறுவது பொய்யான தகவல் என பாகிஸ்தான் பிரசாரம் செய்தது.
ஒருமாத காலம் வரையில் அமைதி காத்த நிலையில் சீன வல்லுநர்கள் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தியது எங்கள் தயாரிப்பு விமானம் என தகவல் வெளியிட்டனர்.
இப்போது நாங்கள் சீன தயாரிப்பு JF-17 தண்டர் விமானங்களையே இந்தியாவிற்கு எதிராக நிலை நிறுத்தினோம் என பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.