அலென் வீதி மற்றும் நெடுஞ்சாலை 401ற்கு அருகே, வர்ணா டிரைவ் மற்றும் ராணி அவென்யூபகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.45 மணி அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் தமது வீட்டுக்கு வந்துள்ளதாக, அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து கிடைத்த அழைப்பை அடுத்து அங்கு பொலிஸார் விரைந்தனர்.
அங்கு சென்றபோது நெஞ்சுப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குறித்த அந்த நபர் காணப்பட்டதாகவும், சுயநினைவுடனும் சுவாசித்தவாறும் காணப்பட்ட அந்த நபர் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீடு அமைந்துள்ள வீதியில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ள நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் அருகில் இருந்த அந்த வீட்டுக்குச் சென்று உதவி கோரியுள்ளதாகவும், சம்பவ இடத்தில் வெற்றுத் தோட்டாக்கள் பல காணப்பட்டதாகவும், சம்பவ இடத்திலிருந்து இருவர் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை நிற புதிய BMW ரக வாகனத்தில் தப்பிச் சென்ற அந்த இருவருமே சந்தேக நபர்கள் என்று நம்பப்படும் நிலையில், அவர்கள் இருவரையும் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களை கண்டால் அல்லது அவர்கள் குறித்து தகவல் அறிந்தால் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும், இருவரும் ஆயுதங்களுடன் இருக்கக்கூடும் என்பதால் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்