நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் குறித்து அ.தி.மு.க. தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழநிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். அத்துடன் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பது பற்றியும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதன் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க.வுக்கு 7, பா.ஜ.க.வுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா.வுக்கு 1, புதிய தமிழகம் கட்சிக்கு 1, புதிய நீதிக்கட்சிக்கு 1, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. பா.ஜ.க. தவிர மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டன.
பா.ஜ.க.வுக்கு கன்னியாகுமரி, கோவை, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய 4 தொகுதிகள் உறுதியாகி விட்டன. 5ஆவது தொகுதி எது என்பதில் இழுபறி நிலை இருந்தது. வடசென்னை, திருச்சி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் இருந்து ஒன்றை பா.ஜ.க. கேட்டுவந்தது.
ஆனால், அ.தி.மு.க. தலைமை பா.ஜ.க.வின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இராமநாதபுரம் தொகுதியைத் தருவதாக வாக்குறுதி அளித்தது. இதனால், அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது, இராமநாதபுரம் தொகுதியைப் பெற பா.ஜ.க. சம்மதம் தெரிவித்துவிட்டது. இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.
இந்நிலையிலேயே, அடுத்து வேட்பாளர்கள் குறித்த ஆலோசனையில் அ.தி.மு.க ஈடுபட்டுள்ளது.