அயோத்தி பிரச்னை தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய். சந்திராசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. நாஸர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நிர்மோஹி அகாரா தவிர்த்த பிற ஹிந்து அமைப்புகள், மத்தியஸ்தரை நியமித்து, அயோத்தி பிரச்னை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை அவரிடம் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. அதேநேரத்தில், முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும், மத்தியஸ்தரை நியமிப்பதற்கு ஆதரவு தெரிவித்தன.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு நீதிபதிகள் கூறியதாவது, “இந்த வழக்கு, வெறும் நிலம் தொடர்பானது மட்டுமல்ல. மக்களின் நம்பிக்கை, உணர்வும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது.
முகலாய ஆட்சியாளர் பாபர் என்ன செய்தார், அதன்பிறகு என்ன நடைபெற்றது என்பது குறித்து எங்களுக்கு கவலையில்லை. தற்போதைய நிலையில் அங்கு என்ன இருந்தது என்பது குறித்து மட்டுமே கவனத்தில் எடுத்து கொள்வோம்.
சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் (மனுதாரர்கள்), மத்தியஸ்தம் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி உச்சநீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது.
இப்படி செய்வது, இருதரப்பினரிடையே சுமூக உறவை ஏற்படுத்த உதவியாக இருக்கும். அயோத்தி விவகாரத்தை மத்தியஸ்தத்துக்கு அனுப்புவதா? என்பது குறித்த முடிவை உச்சநீதிமன்றம் விரைவில் அறிவிக்கும்.
இந்த விவகாரத்தில், இருதரப்பும் ஏற்கும் வகையில் முடிவு எட்டப்படுவதற்கு, மத்தியஸ்தர்களின் பெயர்களை அளிக்கும்படி மனுதாரர்களை கேட்டுக் கொள்கிறோம்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அயோத்தி விவகாரத்தில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில் நிர்மோஹி அகாரா, ராம் லாலா, சன்னி வக்பு வாரியம் ஆகியன பிரச்னைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை தங்களுக்குள் சரிசமமாக பங்கீட்டு கொள்ளும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் 14 பேர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் அயோத்தி வழக்கில் மத்தியஸ்தரை நியமனம் செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.